ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் கிடைத்திட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் பேச்சு
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளபடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
நேற்று அவர் எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டவர் நகர், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, பொம்மசமுத்திரம், சாளபாளையம், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, நவலடிப்பட்டி, வரதராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.
அவருக்கு ஆதரவாக முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளபடி ரூ.100-க்கு அனைத்து சேனல்களும் கிடைத்திடவும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைத்திடவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிடவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தல் பிரசாரத்தின் போது கொ.ம.தே.க. மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story