தி.மு.க. வெற்றி பெற்றவுடன் விவசாயிகளின் நகை அடமானக்கடன் தள்ளுபடி செய்யப்படும் வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் உறுதி
தி.மு.க. வெற்றி பெற்றவுடன் விவசாயிகளின் நகை அடமானக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஓமலூர் பகுதியில் பிரசாரம் செய்த தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதியளித்தார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் நேற்று ஓமலூரை அடுத்த கருப்பூர், கோட்டை மாரியம்மன், ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, திண்டமங்கலம், என்.செட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, பெரியேரிபட்டி, தொளசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள், வணிகர்கள், தொழில்அதிபர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் முதல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணிகள் வரை விலையேற்றம் அடைந்துள்ளது. சமையல் கியாஸ் விலை ரூ.400-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு, கேபிள் கட்டணம் ரூ.300 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் எனக்கூறி ஏமாற்றியவர் பிரதமர் மோடி. இனியும் அவரை மக்கள் நம்பக்கூடாது. ஆனால் ராகுல்காந்தி பிரதமர் ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதோடு, அவர்களின் நகை அடமானக்கடனும் தள்ளுபடி செய்யப்படும். மேலும், நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை நிச்சயம் செய்யப்படும். மேட்டூர் அணை நிரம்பி வழிந்தாலும் நமக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட பயன்படுவதில்லை. இதற்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி நீரேற்று பாசன திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் இங்குள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பி விவசாயம் செழிக்கவும், ஆடு, மாடு வளர்ப்பு மேம்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க சேலத்தில் தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு, மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் செல்வகுமரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story