மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஓசூர் நகரம் அபார வளர்ச்சி பெறும் வேட்பாளர் செல்லகுமார் பிரசாரம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஓசூர் நகரம் அபார வளர்ச்சி பெறும் என்று வேட்பாளர் செல்லகுமார் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓசூர் நகரில் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார். ஓசூர் நகரில் காந்தி சாலை, ஏரித்தெரு, நேதாஜி சாலை, சின்ன எலசகிரி, கே.சி.சி.நகர், பஸ்தி, பாகலூர், அவுசிங் போர்டு, வசந்த நகர், வெங்கடேஷ் நகர், சீதாராம் நகர், பார்வதி நகர், தேர்பேட்டை, ராஜகணபதி நகர், பாரதிதாசன் நகர், ரெயில் நிலையம், சாந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தான் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, ராகுல்காந்தி பிரதமராக வந்தால் ஓசூர் நகரம் அபார வளர்ச்சி பெறும்.
மேலும் ஓசூர் நகரில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஓசூரில் தொழில் வளம் மேலும் பெருகும். நான் வெற்றி பெற்றால் ஓசூர் நகர தெலுங்கு, கன்னட மொழி பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவேன். ஓசூர் நகரில் கூடுதல் மேம்பாலங்கள் கட்டிட நடவடிக்கை எடுப்பேன். நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஓசூர் நகருக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தருவேன். ஓசூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
இவ்வாறு செல்லகுமார் கூறினார்.
இந்த பிரசாரத்தின் போது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்.பி.சுகவனம், ஓசூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், நகர தலைவர் நீலகண்டன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்ன பில்லப்பா, காங்கிரஸ் நிர்வாகிகள் சூர்யகணேஷ், நாராயணமூர்த்தி, தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story