தளி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி தீவிர பிரசாரம்
தளி சட்டமன்ற தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி தீவிர பிரசாரம் செய்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். அவர் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருதுகோட்டை, சந்தனப்பள்ளி, ரத்தினகிரி, அனுமந்தபுரம், கெலமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் கே.பி.முனுசாமி பேசியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த நான் உங்களின் தேவைகளை நன்கு அறிந்தவன். தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.
வன விலங்குகளிடம் இருந்து விவசாயிகளின் பயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலை கிராமங்கள் நிறைந்த இந்த சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
கன்னட, தெலுங்கு மொழி பாடங்களுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை இந்த பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
அப்போது அசோக்குமார் எம்.பி., கெலமங்கலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சையத் அசேன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகேசன், பா.ம.க. தேர்தல் பொறுப்பாளர் அருண் ராஜன், இருதுகோட்டை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், அ.தி.மு.க. பிரமுகர் ராமமூர்த்தி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணி, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மாதுசாமி, பா.ஜனதா ஒன்றிய பொறுப்பாளர் காசிராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க உறுப்பினர் வெங்கடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story