இறுதி பட்டியல் வெளியீடு: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 14.13 லட்சம் வாக்காளர்கள் 14,881 பேர் புதிதாக சேர்ப்பு


இறுதி பட்டியல் வெளியீடு: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 14.13 லட்சம் வாக்காளர்கள் 14,881 பேர் புதிதாக சேர்ப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 7:26 PM GMT)

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி புதிதாக சேர்க்கப்பட்ட 14 ஆயிரத்து 881 வாக்காளர்களுடன் சேர்த்து, மொத்தம் 14 லட்சத்து 13 ஆயிரத்து 246 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்த மங்கலம் மற்றும் சங்ககிரி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி 13 லட்சத்து 98 ஆயிரத்து 365 வாக்காளர் கள் இருந்தனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப் பட்டது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் பலர் விண்ணப்பம் செய்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் இறந்து போன வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த பட்டியலின் படி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட 14 ஆயிரத்து 881 வாக்காளர்களுடன் சேர்த்து, மொத்தம் 14 லட்சத்து 13 ஆயிரத்து 246 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 247 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 17 ஆயிரத்து 888 பெண் வாக்காளர்களும், 111 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 13 ஆயிரத்து 246 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண்கள் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 641 பேர் அதிகம் உள்ளனர்.

ராசிபுரம் சட்டசபை தொகுதியை பொறுத்த வரையில் புதிதாக 2,437 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,288 பேரும், நாமக்கல் தொகுதியில் 2,725 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 2,202 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 2,045 பேரும், சங்ககிரி தொகுதியில் 3,184 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story