முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை: தலைமறைவான மகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை: தலைமறைவான மகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 7:41 PM GMT)

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தை வேலுவின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

அடையாறு,

சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தவர் ரத்தினம்(வயது 63). இவருடைய கணவர் குழந்தைவேலு. திருசெங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான இவர், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

ரத்தினத்துக்கு சுதா என்ற மகளும், பிரவீன்(35) என்ற மகனும் உள்ளனர். சுதாவுக்கு திருமணமாகி குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். மேல் படிப்புக்காக வெளிநாடு சென்று இருந்த பிரவீன், கடந்த மாதம் நாடு திரும்பினார். அவர் வெளிநாட்டிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரத்தினம், தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரவீன் வெளிநாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது சம்பந்தமாகவும், சொத்து தொடர்பாகவும் தாய்க்கும், மகனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், நேற்று முன்தினம் இரவு பெற்ற தாய் என்றும் பாராமல் ரத்தினத்தின் கை, கால்களை கட்டி, வாயில் பேப்பரை திணித்து, டேப்பால் ஒட்டி அவரது கழுத்தை நெரித்தும், கத்தியால் மார்பில் குத்தியும் கொடூரமாக கொலை செய்து உள்ளார்.

பின்னர் தாயின் உடலை வீட்டின் உள்ளே வைத்து, கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவான பிரவீன், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் பொருட்டு அடையாறு துணை கமிஷனர் செஷாங்சாய் உத்தரவின்பேரில் பிரவீனின் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கினர்.

மேலும், அவர் வெளிமாநிலத்துக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பலவேசம், முருகன், மனோகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து பிரவீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story