ஆத்தூர் பகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம்
ஆத்தூர் பகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பஸ் நிலையம், வேலூர், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், முல்லை வாடி, மந்தைவெளி, காட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று வாக்கு சேகரித்தார்.
அவர் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த போது பேசியதாவது:-
கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், எனது பெற்றோரின் ஆசியுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன். விஜயகாந்தை தொட்டவர்கள் கெட்டார்கள் என்பதற்கு உதாரணமாக நமது கூட்டணியை இழிவாக பேசிய துரைமுருகனை குறிப்பிடலாம். அவரது கட்சிக்காரர்கள் வீடுகளில் அரிசி மூட்டை போல பணம் எடுக்கப்பட்டுள்ளது.
எல்.கே.சுதீஷ் எனது தாய் மாமன் என்பதற்காக நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. நல்ல மனிதர் அவர். அதற்காக தான் வந்துள்ளேன். நாட்டில் தண்ணீர் பிரச்சினை இருப்பதால், நதிகளை இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் தமிழகத்தில் நதிகளை இணைக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார். அப்போது தண்ணீர் பஞ்சம் தீரும். எதை ஆதரிக்க வேண்டுமோ? அதை ஆதரிக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டுமோ? அதனை எதிர்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் அ.தி.மு.க. அரசை எதிர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார்.
நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். மக்களே சிந்தித்து வாக்களியுங்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையில் தி.மு.க.வின் பங்கு எவ்வளவு என்பது உங்களுக்கே தெரியும். தி.மு.க. ரவுடியிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பிரியாணி கடையில் சென்று தாக்குவது போன்ற பல்வேறு அராஜக செயல்களில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது.
மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி, வரும் பட்சத்தில் நாடு வளம் பெறும். முரசு சின்னம், ராசியான சின்னம். எனவே இந்த தொகுதி வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் மூன்றாவது பொத்தானை அழுத்தி முரசு சின்னத்தில் எல்.கே.சுதீசுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி வாக்களிக்கும் பட்சத்தில் அவர் மத்திய மந்திரியாக வந்து, உங்களுக்கு தேவை யானவற்றை செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத், ஆத்தூர் நகர செயலாளர் சீனிவாசன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் கர்ணன், வாழப்பாடி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், சண்முகம், மாவட்ட மாணவரணி நிர்வாகி வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story