மீன்பிடி தடைகாலம் தொடங்கியது, கடலூரில் படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் - ஆழ்கடலில் மீன்பிடித்தவர்களும் கரை திரும்பினர்


மீன்பிடி தடைகாலம் தொடங்கியது, கடலூரில் படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் - ஆழ்கடலில் மீன்பிடித்தவர்களும் கரை திரும்பினர்
x
தினத்தந்தி 16 April 2019 3:30 AM IST (Updated: 16 April 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைகாலம் காரணமாக படகு என்ஜின்களை சீரமைக்கும் பணியை மீனவர்கள் தொடங்கி உள்ளனர்.

கடலூர்முதுநகர்,

கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடலில் மீன்பிடிக்க தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் இந்த தடைகாலம் 45 நாட்களாக இருந்தது, பின்னர் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர கடல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடல் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்களும், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்திவைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்பு உள்ளதால், கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த தடை உத்தரவு அமலில் உள்ள 61 நாட்களும், விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் தடைகாலம் தொடங்கியதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்தனர். இதற்கிடையில் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் படகு என்ஜின்களை பழுது பார்க்கும் பணியை தற்போது தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில் கடலூர் துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை பழுதுபார்ப்பதற்காக அதனை தங்களது பகுதிக்கு லாரிகளில் எடுத்து சென்றதை காண முடிந்தது. மேலும் ஒரு சில மீனவர்கள் தங்களது படகு என்ஜின்களை சீரமைப்பதற்காக அதனை படகில் இருந்து கழட்டி பொக்லைன் எந்திரம் மூலம் எடுத்து சென்றனர். 

Next Story