மத்தியில் நிலையான ஆட்சி தொடர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்
மத்தியில் நிலையான ஆட்சி தொடர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று சரத்குமார் பிரசாரம் செய்தார்.
பணகுடி,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று நெல்லை மாவட்டம் காவல்கிணறில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்விக்காக முதன் முதலில் மாணவர்களுக்கு மடிக்கணினியை இலவசமாக தந்தவர் ஜெயலலிதா. மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சியை அமைக்க மெகா கூட்டணி அமைந்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தான் எழுதி வைத்ததையே தப்பு தப்பாக பேசி வருகிறார். அவர் கணக்கில் கூட வீக்காக உள்ளார். தி.மு.க.வினர் அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.
தமிழகத்திலும், மத்தியிலும் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே குறை கூற முடியாமல் தனிநபர் விமர்சனம் எழுப்பப்படுகிறது. 2004-ல் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஹெலிகாப்டர் ஊழல் 200 மில்லியன் டாலர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்து இருபத்து ஆறாயிரம் கோடி ரூபாய். காங்கிரஸ் 55 ஆண்டுகளாக மக்களுக்கு என்ன செய்திருக்கிறது. ஆகவே மத்தியில் நிலையான ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் காமராஜர் சிலைக்கு சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரசாரத்தில் வேட்பாளர் மனோஜ் பாண்டியன், இன்பதுரை எம்.எல்.ஏ., வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்கள் வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன், பணகுடி ஜெயலலிதா பேரவை ஜெகன், ச.ம.க. நகர செயலாளர் செல்வராஜ், பா.ஜ.க. நாடாளுமன்ற பொறுப்பாளர் கனிஅமுதா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று காலை சேரன்மாதேவி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
Related Tags :
Next Story