‘நதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரானது’ ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்தர்சிங் பேச்சு


‘நதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரானது’ ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்தர்சிங் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 7:54 PM GMT)

நதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரானது என்று தண்ணீர் மனிதன் ராஜேந்தர் சிங் கூறினார்.

கோவை,

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுவாணி விழுதுகள் ஆகியவை சார்பில், இந்தியாவின் தண்ணீர் மனிதன் ராஜேந்தர் சிங்கை கோவைக்கு அழைத்து வந்து நொய்யல் ஆறு உற்பத்தியாகும் சிறுவாணி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள சுனைகள் மற்றும் நீரோடைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். கோவைக்கு நிலத்தடி நீரை பெருக்கவும், நீர் ஆதாரங்களை நிரப்பவும் முக்கிய ஆறாக விளங்கும் நொய்யல் ஆற்றினை மறுசீரமைப்பு செய்து அதனை ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுடன் ராஜேந்தர் சிங் கலந்தாய்வு நடத்தினார்.

நொய்யலின் கிளை நதிகளின் வழித்தடங்களில் நகரமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும், அதனை எப்படி உயிரோட்டமான நீரோடையாக மாற்ற செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வு கூட்டத்தின்போது தண்ணீர் மனிதன் ராஜேந்தர் சிங் கூறியதாவது:- ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் இறந்து கொண்டு இருந்த பல ஆறுகளுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டதின் காரணமாக இப்போது தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. நொய்யல் ஆறு உற்பத்தியாகும் பகுதி கேரளாவின் மழைக்காலமான தென்மேற்கு பருவமழையை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 100 சதவீதம் மழை பெய்யும்போது, நொய்யல் ஆறு பெய்யும் பகுதிகளில் வெறும் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழை பெய்து மழைக்காலத்தின்போது மட்டுமே தண்ணீர் செல்கிறது.

நொய்யல் ஆறு பாயும் பகுதிகளை பசுமையாக்க வேண்டும். பொதுவாக ஆறுகளை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடுகிற ஆற்றை நடக்க வைக்க வேண்டும். நடக்க வைத்ததை தவழ வைக்க வேண்டும். தவழ வைப்பதை நிற்க வைக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதற்கு நொய்யல் ஆறு பாயும் பகுதிகளில் தடுப்பணைகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும். கான்கிரீட்டினால்தான் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தந்தந்த பகுதிகளில் உள்ள கல், மண்ணை பயன்படுத்தி தடுப்பணைகளை கட்டலாம். இதன் மூலம் நீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கோவை பீளமேட்டில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், நொய்யல் ஆறு மற்றும் நீர்நிலைகளை காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராஜேந்தர்சிங் விளக்கி கூறினார். தமிழ்நாடு நீர்வளத்துறை துணைத்தலைவர் இளங்கோவன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மணிகண்டன், சிறுவாணி விழுதுகள் அமைப்பை சேர்ந்த சக்திவேல் உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நதிகள் இணைப்பு குறித்து தண்ணீர் மனிதன் ராஜேந்தர் சிங் கூறியதாவது:- நதிகளை இணைப்பது இயற்கை முறைக்கு எதிரானதாகும். நதிகள் இணைப்பு சாத்தியமாகக்கூடாது. நதிகள் இணைப்பு என்பது சூழலியல், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக முடியும். நதிகளை இணைப்பது மிகப்பெரிய குற்றம். மனித உடல்களில் வெவ்வேறு ரத்த வகைகள் இருப்பது போல், ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதனால் அந்த நதிகளை இணைப்பதற்கு பதிலாக அவற்றை உயிர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தண்ணீர் பஞ்சம் வராது. தமிழ்நாட்டில் நதிகளை இணைப்போம் என்று கூறிக்கொண்டு நதிகளை அழகுபடுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். நதிகளை உயிர்ப்பித்தால்தான் பலன் கிடைக்கும். நீர் ஆதாரங்களை தூர்வாரி பேணி பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story