இருவேறு சம்பவங்களில் போலீசாரை தாக்கிய கட்டிட கலைஞர், வக்கீல் கைது


இருவேறு சம்பவங்களில் போலீசாரை தாக்கிய கட்டிட கலைஞர், வக்கீல் கைது
x
தினத்தந்தி 16 April 2019 4:15 AM IST (Updated: 16 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு சம்பவங்களில் போலீசாரை தாக்கிய கட்டிட கலைஞர், வக்கீல் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையம் அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீஸ்காரர் தீபக் மறித்து டிரைவரிடம் ஆவணங்களை கேட்டார்.

அப்போது டிரைவரிடம் கார் காப்பீடு செய்யப்பட்டதற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து காரில் இருந்து இறங்கி அதன் உரிமையாளர் அர்மான் (வயது26) என்பவர் செல்போனில் காப்பீடு ஆவணத்தின் நகலை காட்டினார். ஆனால் அதை போலீஸ்காரர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அர்மான் போலீஸ்காரர் தீபக்கின் சட்டை காலரை பிடித்து தாக்கினார். உடனடியாக அருகில் நின்று கொண்டு இருந்த மற்றொரு போலீஸ்காரர் அர்மானை பிடித்து ஆசாத் மைதானம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்மானை கைது செய்தனர். விசாரணையில், அர்மான் மும்பை மெரின்லைன்ஸ் பகுதியில் வசித்து வரும் கட்டிட கலைஞர் என்பதும், குடிபோதையில் அவர் போலீஸ்காரரை தாக்கியதும் தெரியவந்தது.

கார் பகுதியை சேர்ந்தவர் சமீர் சகானி. வக்கீல். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள மரத்தில் மாங்காய் திருடியதாக சில சிறுவர்களை பிடித்து கார் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்தார். போலீசார் பெற்றோரை வரவழைத்து சிறுவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்தநிலையில் சிறுவர்களை ஏன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என வக்கீல் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது போலீசார் மாங்காய் பறித்ததற்கு எல்லாம் சிறுவர்களை கைது செய்ய முடியாது, மேலும் அவர்கள் பெரிய குற்றம் எதுவும் செய்யாததால் எச்சரித்து அனுப்பினோம் என கூறினர்.

இதை ஏற்காத வக்கீல் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோபாலேயை தாக்கினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீர் சகானியை கைது செய்தனர்.

Next Story