நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, துணை ராணுவம்-போலீசார் அணிவகுப்பு
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியையொட்டி திண்டுக்கல்லில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 137 பதற்றமான வாக்குச்சாவடிகள், 7 சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு இருக் கின்றன. இந்த 144 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது. இதுதவிர மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புஅளிக்கப்பட உள்ளது.
இதில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் துணை ராணுவ படை வீரர்கள் 250 பேர், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை திண்டுக்கல்லில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் அணிவகுப்பு நடந்தது.
இதில் துணை ராணுவ படை வீரர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர். திண்டுக்கல் பேகம்பூரில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதேபோல் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள கிராமங்களிலும் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
பழனியில் நேற்று மாலை துணை ராணுவ படையின் அணிவகுப்பு நடந்தது. பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய அணிவகுப்பை துணை சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அணிவகுப்பு மார்க்கெட் ரோடு, பெரியநாயகி அம்மன் கோவில் கிழக்கு ரதவீதி, ஆர்.எப். ரோடு வழியாக வந்து பஸ்நிலைய பகுதியில் நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story