சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு சதவீதம்கூட சிதறி விடக்கூடாது திருச்சியில் தமிமுன்அன்சாரி பேச்சு
சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு சதவீதம் கூட சிதறி விடக்கூடாது என்று திருச்சியில் தமிமுன்அன்சாரி பேசினார்.
திருச்சி,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., திருச்சி ஆழ்வார்த்தோப்பு பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்த நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ராகுல்காந்தி தான் பிரதமராக வரவேண்டும். அதன்அடிப்படையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் நமக்குள் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார்கள். ஆகவே சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு சதவீதம் கூட சிதறி விடக்கூடாது.
திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனைவரிடமும் சகிப்பு தன்மையுடன் பழகக்கூடியவர். ஆகவே உங்கள் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அவருக்கு அளிக்க வேண்டும். இப்போது நான் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதால் எனது எம்.எல்.ஏ. பதவிக்கூட பறிக்கப்படலாம். ஆனால் எனக்கு பதவி முக்கியமல்ல. நம்முடைய கொள்கையிலும், நிலைப்பாட்டிலும் தெளிவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.