குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 9:50 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி ஊராட்சியில் குறிஞ்சாக்குளம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வரவில்லை. கடும் வறட்சியால் நிலத்தடி நீர் குறைந்ததால் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இந்த பகுதி பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, ஊராட்சி மூலம் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பயனற்று காட்சி பொருளாக உள்ளன. இதனால் எங்களது கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகித்து வருகிறோம். கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், 100 நாள் வேலை திட்டப்பணிகளையும் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

இதனால் எங்களுடைய நிலை கேள்வி குறியாகி உள்ளது. எங்களுடைய நிலை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என்றனர்.


Next Story