பிரசாரத்தின்போது எந்த வேட்பாளர்களாலும் கண்டு கொள்ளப்படாத ஆலங்குளம் சிமெண்டு ஆலை வெற்றிக்கு பின்பாவது கவனிக்கப்படுமா?
பிரசாரத்தின்போது எந்த வேட்பாளர்களாலும் ஆலங்குளம் சிமெண்டு ஆலை கண்டு கொள்ளப்படாத நிலை உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுபவர் அதற்கு பின்பாவது ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலை உள்ளது. சிமெண்டு உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கல் இந்த பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள நிலையில் இந்த சிமெண்டு ஆலை தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 1800 தொழிலாளர்களுடன் இந்த ஆலை செயல்பட்டு வந்தது. தினசரி 2 ஆயிரம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
அதன் பின்னர் படிப்படியாக நலிவடைந்த இந்த ஆலை, தற்போது 80 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. உற்பத்தியும் தினசரி 50 டன்னுக்கு குறைவாகவே உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சட்டமன்ற குழுக்கள் இந்த ஆலையை ஆய்வு செய்து விட்டு இதனை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தன. மத்திய தொழில்துறையிடம் இருந்து ரூ.500 கோடி நிதியுதவி பெற்று இந்த ஆலை புனரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2005–ம் ஆண்டு இந்த ஆலை ரூ.205 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதிஅளித்த போதிலும் எந்த வேட்பாளரும் ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவிக்கவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நலிவடைந்த நிலையிலும் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஆலங்குளம் சிமெண்டு ஆலை தான். ஆனால் எந்த வேட்பாளரும் இதை கண்டு கொள்ளாதது ஏன் என தெரியவில்லை.
இந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்களாவது ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த மத்திய–மாநில அரசுகளிடம் இருந்து நிதி உதவி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்படும்.