ராமநாதபுரம் அருகே மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்
ராமநாதபுரம் அருகே மனைவி மீது சந்தேகமடைந்து உயிருடன் எரிக்க முயன்ற கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள ஈசுப்புலிவலசை பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் குமார்(வயது35). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கனகா(27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. கனகா கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கனகாவிற்கும், அவரின் கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியின்மேல் சந்தேகப்பட்டு குமார் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த குமார் மனைவி கனகாவின் மீது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
அவருடைய அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது குமார் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவர்கள் தீயை அணைத்து ஆபத்தான நிலையில் கனகாவை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.