மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தேர்தல் அதிகாரி அபிராம் ஜி.சங்கர் பேட்டி


மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்  - தேர்தல் அதிகாரி அபிராம் ஜி.சங்கர் பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 3:45 AM IST (Updated: 16 April 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் அதிகாரி அபிராம் ஜி.சங்கர் தெரிவித்தார்.

மைசூரு, 

மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மைசூரு மாவட்ட கலெக்டருமான அபிராம் ஜி.சங்கர் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிக்கான பகிரங்க பிரசாரம் நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு பிறகு வெளியூர் நபர்கள் தங்கக் கூடாது. அவர்கள் அனை வரும் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 17-ந்தேதி வேட்பாளர்கள் மட்டும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மைசூரு-குடகு தொகுதியில் மொத்தம் 18 லட்சத்து 95 ஆயிரத்து 56 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 819 ஆண்களும், 9 லட்சத்து 50 ஆயிரத்து 87 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தினர் 150 பேரும் அடங்குவர். மொத்தம் 2,187 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணிக்கு 2,406 வாக்குச்சாவடி அலுவலர்களும், 4,812 துணை வாக்குச்சாவடி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மடிகேரி புனித ஜோசப் கான்வென்ட், விராஜ்பேட்டை அரசு ஜுனியர் கல்லூரி, பிரியப்பட்டணா புஷ்பா கான்வென்ட், உன்சூர் தேவராஜ் அர்ஸ் கல்லூரி, சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு மைசூரு மகாராணி கல்லூரி, கிருஷ்ணராஜா தொகுதிக்கு மகாராஜா கல்லூரி நூற்றாண்டு விழா பவனிலும், சாமராஜா தொகுதிக்கு சாரண-சாரணிய மைதானத்திலும், நரசிம்மராஜா தொகுதிக்கு ஜே.எஸ்.எஸ். கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடிக்கான உபகரணங்களை எடுத்துச் செல்லும் பணி நடக்க உள்ளது.

இதற்கான சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் தேர்தலையொட்டி மைசூரு நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயுதப்படை, மத்திய படை போலீசார் என 6,175 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மைசூரு-குடகு தொகுதியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story