பணத்தகராறில் கணவன் – மனைவிக்கு கத்திக்குத்து ரவுடிக்கு வலைவீச்சு


பணத்தகராறில் கணவன் – மனைவிக்கு கத்திக்குத்து ரவுடிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 April 2019 10:42 PM GMT (Updated: 15 April 2019 10:42 PM GMT)

அரும்பார்த்தபுரத்தில் பணத்தகராறில் கணவன்– மனைவியை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூலக்குளம்,

புதுவை அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மோகன் (20), தனியார் கல்லூரியில் எம்.டெக்., படித்து வருகிறார். தேவி வீட்டில் தையல் கடை வைத்துள்ளார்.

பக்கத்து தெருவை சேர்ந்த தரணியா (27) என்பவர் தேவியின் கடைக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தேவியின் மகன் மோகன், தரண்யாவிடம் செல்போன் வாங்குவதற்காக ரூ.4 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவியின் வீட்டுக்கு தரண்யா சென்று, தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தரண்யா தனது கணவர் தங்கப்பராஜனிடம் கூறினார். இதையடுத்து அவர், தேவி வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த தங்கப்பராஜன், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தை குத்தினார். இதை தடுக்க முயன்ற தேவியையும் அவர் குத்திவிட்டு தப்பிச் சென்றார். கத்திக்குத்தில் காயமடைந்த ஆறுமுகம், தேவி இருவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தங்கப்பராஜனை வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடியான அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story