ஆட்சியில் இருந்தபோது கேட்காமல் விட்டு விட்டு மாநில அந்தஸ்து பற்றி ரங்கசாமி இப்போது பேசுவது ஏன்? நாராயணசாமி கேள்வி


ஆட்சியில் இருந்தபோது கேட்காமல் விட்டு விட்டு மாநில அந்தஸ்து பற்றி ரங்கசாமி இப்போது பேசுவது ஏன்? நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 16 April 2019 5:15 AM IST (Updated: 16 April 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கேட்காமல் இருந்து விட்டு மாநில அந்தஸ்து பற்றி ரங்கசாமி இப்போது பேசுவது ஏன்? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி விடுத்தார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தவில்லை, காங்கிரஸ் ஆட்சியில் காலதாமதங்கள் ஆகிறது என்று குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்களுக்கு நாங்களும் பதில் அளித்து வருகிறோம். குறிப்பாக இலவச அரிசி திட்டம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இலவச அரிசி முறையாக போடப்படவில்லை.

ஆட்சியில் இருந்த 60 மாதத்தில் 20 முறைதான் இலவச அரிசி போட்டனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதுவும் 2 அல்லது 3 மாதத்துக்கு ஒருமுறைதான் அரிசி போட்டனர். 2014, 2015, 2016 ஆகிய 3 வருடங்களில் அவர்கள் இலவச அரிசிக்காக செலவு செய்த தொகை ரூ.193 கோடி மட்டுமே. நாங்கள் 3 வருடத்தில் இலவச அரிசி திட்டத்துக்காக ரூ.305 கோடி செலவு செய்துள்ளோம். இப்போது யார் திட்டத்தை முறையாக செயல்படுத்தியது என்பது மக்களுக்கு தெரியவரும்.

அதேபோல் முதியோர், விதவை உதவித்தொகை என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் காலத்தோடு வழங்கவில்லை. 2014-ல் 2 மாதத்துக்கு ஒருமுறைதான் வழங்கப்பட்டது. அதுவும் காலம் கடந்து வழங்கினார்கள். ஆனால் நாங்கள் பதவியேற்றபின் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து மாதாமாதம் தடையின்றி வழங்கி வருகிறோம்.

குப்பை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்றத்தில் பதில் தந்தார். வீட்டுவரி 25 சதவீதம் குறைக்கப்படும் என்றார். இதுதொடர்பாக கோப்பு தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பினோம். அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். காங்கிரஸ் அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிவிடக்கூடாது என்பதுதான் இதற்கு காரணம். குடிநீர் வரி, மின்சார கட்டணத்தை குறைக்க தேர்தலுக்குப்பின் நடவடிக்கை எடுப்போம்.

அரசு சார்பு நிறுவனம், கூட்டுறவு நிறுவனங்கள், மில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட பட்ஜெட்டில் ரூ.627 கோடி ஒதுக்கினோம். ஆனால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட கவர்னர் உத்தரவு போடுகிறார். இதன் காரணமாகவே ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நிதியாதாரம் இருந்தும் சம்பளம் போட ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார்.

அரசு நிர்வாகத்தில் தலையிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த மத்திய அரசின் தூண்டுதலோடு செயல்படுகிறார். இதற்கு மே மாத இறுதிக்குள் முடிவு காணப்படும். காங்கிரஸ்-தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அறிக்கையில் அவை இல்லை. மாநில உரிமைகளை கொடுக்க பா.ஜ. மறுத்து வருகிறது.

புதுவை மாநிலத்துக்கு விரோதமாக செயல்படும் பா.ஜ.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு வைத்துள்ளது. புதுவையில் என்.ஆர்.காங்கிரசும், மத்தியில் பா.ஜ.க.வும் ஆட்சியில் இருந்தபோது பேசாமல் இருந்து விட்டு மாநில அந்தஸ்து பற்றி ரங்கசாமி இப்போது பேசுவது ஏன்? அவர்களது தேர்தல் அறிக்கையில் இல்லாமல் எப்படி மாநில அந்தஸ்து கிடைக்கும்?

மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக புதுவை மாநிலத்துக்கு உரிய நிதி தரவில்லை. குறிப்பாக 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதியைக்கூட தரவில்லை. இதற்கு கவர்னரும், என்.ஆர்.காங்கிரசும் உடந்தையாக உள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது புதுச்சேரிக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

ஆனால் நாங்கள் மத்திய அரசிடம் போராடி ஸ்மார்ட் சிட்டி, குடிநீர், சுற்றுலா வளர்ச்சி, துறைமுகம் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 5 ஆயிரம் பேருக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி வழங்கியுள்ளோம். சிரமங்களுக்கு இடையே திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று ராகுல்காந்தி கூறியதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, மேகதாது பற்றி ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருகிறார். மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசிவருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

முன்னதாக நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை பெரிய மார்க்கெட்டில் கடை கடையாக சென்று கை சின்னத்துக்கு வாக்குசேகரித்தார். அப்போது வேட்பாளர் வைத்திலிங்கம், முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story