ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 4 குழுக்கள் நியமனம், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை - தேர்தல் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா பேட்டி
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும் 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
கோவை,
மேற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர்கள் சுமித் சரண்(கோவை), சஞ்சீவ்குமார்(திருப்பூர்) கே.சங்கர்(சேலம்), ஐ.ஜி.பெரியய்யா(மேற்கு மண்டலம்), சரக டி.ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன்(கோவை), செந்தில்குமார்(சேலம்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து பாதுகாப்பு பணிகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. அந்த பணிகள் திருப்திகரமாக உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு உதவியாக துணை ராணுவத்தினரும் போதுமான எண்ணிக்கையில் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அதிரடிப்படை வீரர்கள், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் போதுமான எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேற்கு மண்டலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் 16 ஆயிரத்து 716 வாக்குச் சாவடிகள் 6 ஆயிரத்து 992 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆயிரத்து 486 நடமாடும் ்தேர்தல் குழுக்கள்் அமைக்கப்பட்டுள்ளன. 2098 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 15-ந் தேதி வரை 918 வழக்குகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நிலுவையில் இருந்த 4 ஆயிரத்து 499 பிடி ஆணைகள் நிறைவேறப்பட்டுள்ளன.
5 ஆயிரத்து 83 பேர், தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கிற்கும் மற்றும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் அவர்கள் மீது தகுந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதி பிணை பத்திரம் பெறப்பட்டு அவர்கள் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். 63 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மண்டலத்தில் 6 ஆயிரத்து 332 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.52 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரத்து 145 மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அதில் ரூ. 21 கோடியே 67 லட்சத்து 67 ஆயிரத்து 724 மதிப்பிலான பொருட்கள் கருவூலக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த நக்சல் தடுப்புக் குழு மற்றும் சிறப்பு இலக்கு படையும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பதற்றமான பகுதிகளில் நக்சல் தடுப்புப்பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் உடனுக்குடன் தகவல்களை சேகரித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் 24 மணி நேரமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக முழுஅளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தைரியமாக முன்வந்து வாக்களிக்க முன்வர வேண்டும். அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அனைத்து இடங்களிலும் நாங்கள் செய்துள்ளோம். மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்காவது ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தாலும் அதுபற்றி எங்களுக்கு தகவல் கொடுத்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுப்பதை தடுக்க ஏற்கனவே பறக்கும் படையினர் செயல்படுகின்றனர். இவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான நடமாடும் தனிப்படை போலீசார் ஈடுபடுவார்கள். தனிப்படை போலீசார் மோட்டார்சைக்கிளில் சென்றும் சோதனையில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும், 3 முதல் 4 போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு பணம் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி பாதுகாப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், அதற்கு அடுத்த அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு போலீசாரும் மூன்றாவது அடுக்கில் அதிரடி படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் கட்டுப்பாட்டு அறையுடன் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதால் எந்த பிரச்சினையும் வராது. எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பூட்டுப்போடப்பட்டு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எந்த சந்தேகமும் எழாது. போலீஸ்காரர் ஒருவர் தபால் ஓட்டை அரசியல் கட்சிக்கு விற்றது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அது பற்றி விசாரிக்கப்படும்.
நான் தேர்தல் பணி தொடர்பான டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்ற பின்னர் போலீஸ் வாகனங்களில் பணம் எதுவும் கொண்டு செல்லப்படவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். எனவே போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று கூறப்படுவது தவறானது. ஆனால் நான் பொறுப்பேற்பதற்கு முன்பு உள்ளது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story