விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ‘மிஸ் கூவாக’மாக தர்மபுரி நபீஷா தேர்வு


விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ‘மிஸ் கூவாக’மாக தர்மபுரி நபீஷா தேர்வு
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 11:06 PM GMT)

விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாக’மாக தர்மபுரியை சேர்ந்த நபீஷா தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் நேற்று காலை விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் நடன நிகழ்ச்சி மற்றும் ‘மிஸ் கூவாகம்’ 2019 அழகிப்போட்டி நடைபெற்றது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவி ராதாம்மாள் வரவேற்றார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பை சேர்ந்த 72 தலைவிகள் முன்னிலை வகித்தனர்.

முதல்கட்டமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற திருநங்கைகள் கூடி நின்று ஆடினார்கள்.

அதனை தொடர்ந்து ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நடந்தது. இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 34 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 15 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாலையில் 2-ம் சுற்றுக்கான அழகிப்போட்டி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் மீண்டும் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடை நடந்து அழகு காட்டினர். கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 5 பேர் தகுதி பெற்றனர்.

இவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த தர்மபுரியை சேர்ந்த நபீஷா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். கோவையை சேர்ந்த மடோனா 2-வது இடமும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ருத்ரா 3-ம் இடமும் பெற்றனர். இதையடுத்து மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட நபீஷாவுக்கு மடோனா, ருத்ரா உள்ளிட்ட திருநங்கைகள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து நபீஷா, மடோனா, ருத்ரா ஆகியோருக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெய்ஆகாஷ், ஆர்.கே.சுரேஷ், ஆரி, நாட்டுப்புற பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா தொகுத்து வழங்கினார்.

Next Story