சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை: “தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி” கனிமொழி எம்.பி. பேட்டி
எனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக இந்த சோதனை நடந்து உள்ளது என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி,
எனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக இந்த சோதனை நடந்து உள்ளது என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
கனிமொழி எம்.பி. பேட்டி
வருமான வரி சோதனை முடிந்ததும் வீட்டில் இருந்து வெளியே வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரவு 8.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அப்போது அதற்கான முறையான ஆவணங்களை கேட்டோம். ஆனால் அவர்கள் எதையும் தரவில்லை. இருப்பினும், நாங்கள் வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஒரு மணி நேரமாக வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் தவறான தகவலால் சோதனை நடத்தியதாக அவர்களே ஒப்புக்கொண்டனர்.
களங்கம் ஏற்படுத்த முயற்சி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் உள்ளது, அதை சோதனையிட தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சோதனை எங்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த முயற்சி இது. ஆதாரம் இல்லாமல் இந்த சோதனையை நடத்தி உள்ளனர். இதை கண்டு தி.மு.க. சளைக்காது. ஏற்கனவே எங்களது கட்சி மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 2 முறை சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளை குறி வைத்து வேண்டுமென்றே இதுபோன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயல்படுகின்றனர். இதை நாங்கள் சந்திப்போம். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் மத்திய அரசுடன் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரவுக்கு நன்றி
தொடர்ந்து அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது கனிமொழி, “நம்மை மிரட்டுவதற்காக இந்த சோதனையை நடத்தி உள்ளனர். அவர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும், நாம் மேன்மக்களாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரும் அமைதியாக கலைந்து வீட்டுக்கு செல்லுங்கள். ஆதரவு தந்ததற்கு நன்றி“ என்றார்.
Related Tags :
Next Story