“நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்” தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்


“நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்” தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்
x
தினத்தந்தி 17 April 2019 3:00 AM IST (Updated: 17 April 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

“என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி, 

“என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்லும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இறுதிக்கட்ட பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்து பகுதியில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து விட்டிலாபுரம், அனவரதநல்லூர், வசவப்பபுரம், வல்லநாடு, முறப்பநாடு, தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். மாலையில் தூத்துக்குடி 3-வது மைல், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், போல்டன்புரம், வி.இ.ரோடு, சுகம் ஓட்டல், பழைய பஸ் நிலையம், குரூஸ்பர்னாந்து சிலை உள்பட மாநகரம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மாலை 6 மணிக்கு அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பு பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பிரசாரத்தின்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

பனங்காட்டு நரி

இந்த மண்ணின் மகளாக நான் உங்களை தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எதிராக போட்டியிடும் கனிமொழியை அறிமுகம் செய்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க சென்றபோது, எந்த தைரியத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி வந்தார். தோற்று போவதற்காக வந்தாரா? என்று கேட்டு இருக்கிறார். இந்த மண் தமிழிசையின் சொந்த மண். இங்கு வர எனக்கு யாரும் துணிச்சல் தர தேவையில்லை. நான் பா.ஜனதாவின் மாநில தலைவர். எனது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், நான் மரியாதையாக இந்த தொகுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் கனிமொழி நேர்முக தேர்வுக்கு சென்றபோது கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட விண்ணப்பித்ததால் மற்ற யாரையும் விண்ணப்பிக்க விடுவதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். உங்கள் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கனிமொழிக்கு பயந்து கொண்டு அவர் போட்டியிடும் தொகுதிக்கு வராமல் இருக்கலாம். ஆனால் இந்த தமிழிசை சவுந்தரராஜன் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன்.

ஊழல் செய்யவே...

எனது அரசியல் வாழ்க்கை சுலபமானது இல்லை. தனது சொந்த தந்தையை விடுத்து நான் மதிக்கும் ஒரு கட்சியில் இணைந்து 20 ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பின் இந்த கட்சியின் தலைவராக இருக்கிறேன். ஆனால் கனிமொழி 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்யசபா எம்.பி. அந்த பதவி எதனால் கிடைத்தது? கருணாநிதியின் மகள் என்பதால் கிடைத்தது. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மை இருந்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை ஊழல் செய்யவே பயன்படுத்தினீர்கள். எனக்கு கோவில் முகவரியும், தொண்டர்கள் முகவரியும் தெரியும். ஆனால் ஊழல் செய்துவிட்டு செல்லும் திகார் சிறையின் முகவரி தெரியாது.

தூத்துக்குடி மக்கள் விவரம் அறிந்தவர்கள். ஊழல்வாதிகளை இந்த தேசிய மண் ஏற்றுக்கொள்ளாது. 20 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட மக்கள் பிரதிநிதி ஆகவில்லை. நீங்கள் எனது அரசியல் வாழ்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடியை பற்றி எனக்கு மிகப்பெரிய கனவு இருக்கிறது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தூத்துக்குடியில் அனைத்தும் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் பொருட்கள் தொடர்பாக தொழிற்சாலை அமைத்து இங்குள்ள ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கனவு என்னிடம் உள்ளது. இங்குள்ள தண்ணீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நம்மால் செயல்படுத்த முடியும். இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா தேவை.

குற்ற வழக்கு கிடையாது

கோவிலுக்கு போவதை கேவலமாக நினைக்கும் கனிமொழியை ஆன்மிக மண்ணான தூத்துக்குடி ஒப்புக்கொள்ளாது. ஆனால் அவரின் அம்மாவை ரகசியமாக திருச்செந்தூர் கோவிலுக்கு அனுப்பி பூஜை செய்ய சொன்னார். அப்படி என்றால் இறைவன் உங்களுக்கு தேவையான நேரம் மட்டும் வேண்டும். மற்ற நேரங்களில் பகுத்தறிவை பேசுகிறீர்கள். பொதுமக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. நேர்மையான அரசியலை முன்னெடுத்துக்கொண்டு செல்லும் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இந்த பிரசாரத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., த.மா.கா. மாநில செயலாளர் மால்மருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story