தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்குறுதி
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக்க முயற்சி மேற்கொள்வேன் என தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.
தென்காசி,
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக்க முயற்சி மேற்கொள்வேன் என தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.
வாக்கு சேகரிப்பு
தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் நேற்று தென்காசியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சக்திநகர், எல்.ஆர்.எஸ். பாளையம், மவுண்டு ரோடு, கொடி மரம் பகுதி, வாய்க்கால் பாலம், அணைக்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது தனுஷ்குமார் பேசியதாவது:-
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி மலர மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களியுங்கள். என்னை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்தால், குற்றாலத்தை சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்வேன். விவசாயத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வேன். மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னதாக அவர் நேற்று காலையில் செங்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கோட்டை போலீஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருக்கு தென்காசி நகர செயலாளர் எஸ்.எம்.ரகீம் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் இருந்தவாறு, செங்கோட்டை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.
இதில், மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், நகர செயலாளர் சாதிர், வார்டு செயலாளர் மோகன்ராஜ், காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், இந்திய கம்யூனிஸ்டு நகர தலைவர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர தலைவர் அயூப்கான், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் லூர்து நாடார், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் கலிவரதன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெங்கடேசன், துணைச்செயலாளர் பேபிரெசவு பாத்திமா, நகர துணைச்செயலாளர் பீர்முகம்மது, பொருளாளர் ஜெயராஜ், இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் வேட்பாளர் தனுஷ்குமார் ராஜபாளையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
Related Tags :
Next Story