நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 121 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - கண்காணிக்க 106 நுண் பார்வையாளர்கள் நியமனம்


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 121 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - கண்காணிக்க 106 நுண் பார்வையாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 16 April 2019 7:53 PM GMT)

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 121 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க 106 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டி,

நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 65 ஆயிரத்து 337 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 202 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 69 பேரும் இருக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 5 லட்சத்து 69 ஆயிரத்து 913 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 549, பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 363 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் உள்ளனர்.

இந்த தொகுதியில் ஆயிரத்து 610 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகர் பகுதிகளில் 736 வாக்குச்சாவடிகளும், கிராமப்பகுதிகளில் 874 வாக்குச்சாவடிகளும் உள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 24 மாதிரி வாக்குச்சாவடிகள், 12 மகளிர் வாக்குச்சாவடிகள் உள்ளன. மகளிர் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் பெண்கள் மட்டுமே இருப்பார்கள். 121 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் 106 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

656 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு அன்று கண்காணிக்கப்படும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மொத்தம் 7 ஆயிரத்து 786 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், 564 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு உதவ ஆயிரத்து 674 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த தொகுதியில் 1933 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஆயிரத்து 927 பதிவு எந்திரங்கள், 2 ஆயிரத்து 72 வி.வி.பேட் எந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இதுவரை ரூ.3 கோடியே 74 லட்சத்து 48 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம் இதுவரை ஆயிரத்து 448 தபால் ஓட்டுகள் பெறப்பட்டு இருக்கிறது. 4 ஆயிரத்து 98 பேருக்கு தேர்தல் பணி சான்றுகள் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் பணியின் போது வாக்களிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 16 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரியில் 4 ஆயிரத்து 98 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வனப்பகுதிகளையொட்டி மற்றும் தொலை தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்கள் செல்லவும் மற்றும் வாக்குச்சாவடிகளில் இருந்து மிக தொலைவில் உள்ள மக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லவும் போக்குவரத்து வசதிகள் செய்யப்படும். நீலகிரியில் 5 லட்சத்து 69 ஆயிரம் பூத் சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தவறாமல் தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையையோ அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையோ கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் சீட்டை மட்டும் கொண்டு வாக்களிக்க இயலாது. ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் குறிக்கப்பட்டு உள்ளது. அந்த தூரத்துக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. நீலகிரியில் 49 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story