கள்ளக்குறிச்சி தே.மு.தி.க.வேட்பாளர் சுதீசுக்கு ஆதரவாக - அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்குசேகரிப்பு
கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசுக்கு ஆதரவாக அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவர் கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு திறந்தவேனில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் எல்.கே.சுதீசுக்கு ஆதரவாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ., விஜயபிரபாகரன், நகர அ.தி.மு.க. செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு ஆகியோர் நேற்று மாலை கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வாகனங்களில் பேரணியாக தீயணைப்பு நிலையம், வ.உ.சி.நகர், கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி ரோடு, கச்சேரி சாலை, சேலம் மெயின் ரோடு, அண்ணாநகர், ஏமப்பேர், கவரைத்தெரு, ராஜாநகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர்.
அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் ஆகியோருக்கு செல்லும் இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின்போது அ.திமு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் ரங்கன், செல்வராஜ், பா.ம.க. மாநில துணை செயலாளர் ரமேஷ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர். முன்னதாக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
Related Tags :
Next Story