வாக்குப்பதிவு மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர சக்கர நாற்காலிகள்
வாக்குப்பதிவு மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்வதற்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தேனி,
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதள வசதிகள் செய்யப்பட்டு உள்ளதோடு, சக்கர நாற்காலி வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. எந்தந்த பகுதிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, தேவையான இடங்களில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொண்டு நிறுவனங்கள் சார்பில் சக்கர நாற்காலிகள் சேகரிக்கப்பட்டு வந்தன. அத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் பெங்களூருவில் இருந்து 152 புதிய சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டன. இந்த சக்கர நாற்காலிகள், தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
இத்துடன் சேர்த்து மாவட்டத்தில் 538 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. இவை, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக மண்டல தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மண்டல தேர்தல் அலுவலர்கள் மூலமாக இன்று (புதன்கிழமை) வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story