அய்யலூர் அருகே பயங்கரம், பூசாரி வெட்டிக்கொலை


அய்யலூர் அருகே பயங்கரம், பூசாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே பூசாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் நயினான்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 60). இவர் அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். அவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதற்கிடையில் முத்துச்சாமி, நாச்சி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வடமதுரை-திருச்சி சாலையில் உள்ள மந்தைக்குளம் பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முத்துச்சாமி நயினான்குளத்துபட்டிக்கு சென்றார். அப்போது மூத்த மனைவியின் மகன்கள் பாண்டிராஜன் (27), வீரமணி (26) ஆகியோர் சொத்தை பிரித்து தரக்கோரி முத்துச்சாமியிடம் கேட்டுள்ளனர். அப்போது முத்துச்சாமிக்கும், மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து முத்துச்சாமியை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் நேற்று காலை மந்தைக்குளம் பகுதியில் முத்துச்சாமி வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வடமதுரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பூசாரி முத்துச்சாமி அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சொத்தை பிரித்து தராததால் மூத்த மனைவியின் மகன்களே, அவரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story