சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து கிரிவலப்பாதையில் அரசு பஸ்சில் சென்று கலெக்டர் ஆய்வு கூடுதலாக 60 சி.சி.டி.வி.கேமராக்கள்
நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அரசு பஸ்சில் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்னும் 3 வகைகளாலும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) இரவு 7.05 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது.
இதனிடையே நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிரிவலப்பாதையிலும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வாக்குச்சாவடிக்கு தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வரும் நிலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, போலீஸ் துறை ஆகிய துணை அலுவலர்களுடன் அரசு பஸ்சில் பயணம் மேற்கொண்டு 4 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் சித்ரா பவுர்ணமி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் இருந்து ஈசான்ய லிங்கம், நகராட்சி மத்திய பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, தேரடி வீதி, ராஜகோபுரம், திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர வீதி, பழைய அரசு மருத்துவமனை, செங்கம் சாலை, காஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக பஸ் நிலையம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, போக்குவரத்து வசதி, நடைபாதையில் நிழற்குடை அமைக்கும் பணிகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பாதைகள், அன்னதானம் வழங்கும் இடங்கள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை இரவு 7 மணி முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை சித்ரா பவுர்ணமி உள்ளது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள். கிரிவலப்பாதையில் கூடுதலாக 60 சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 ஆயிரத்து 900 பஸ்கள் இயக்கப்படுகிறது.
1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாற்றுப்பாதையில் வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்வதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 9 அணுகு சாலைகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த தற்காலிக பஸ் நிலையங்களில் கிரிவலப்பாதை அருகாமை வரை தொடர் பஸ்கள் பக்தர்கள் அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பெருமாள் நகர் வழியாக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, தரையில் தண்ணீர் தெளித்தல், கம்பளம், வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் வழங்கும் பணிகள் போன்றவை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது. கிரிவலப் பாதையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும், அன்னதானம் வழங்கும் இடங்களும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் காலை, மதியம், மாலை நேரங்களில் கிரிவல பாதையில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பி.ஜெயசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story