கஞ்சா விற்ற வழக்கில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர் - கோவை போலீஸ் நிலையத்தில் கைதி மர்மச்சாவு


கஞ்சா விற்ற வழக்கில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர் - கோவை போலீஸ் நிலையத்தில் கைதி மர்மச்சாவு
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார்.

கோவை,

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கார்த்தி என்ற தேங்காய்ப்பால் கார்த்தி(வயது36). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பது உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன.

சம்பவத்தன்று கார்த்தி கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மயங்கிய நிலையில் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே கார்த்தி இறந்து விட்டதாக கூறினர்.

இதையறிந்த கார்த்தியின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த கார்த்திக்கு, பேச்சிமுத்து என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கார்த்தி மீதுள்ள வழக்குகள் தொடர்பாக முன்பு போலீசார் அவரை கைது செய்தபோது தன்னைத்தானே தாக்கி கொள்வது, உடல்நலம் பாதித்து உள்ளது போல நடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் நடிப்பதாக கருதி போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. வெகு நேரத்துக்கு பிறகு கார்த்தி வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். உரிய நேரத்தில் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம், போலீசாரின் அஜாக்கிரதையால் கார்த்தி உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்கிடையே கார்த்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கார்த்தியை நாங்கள் தாக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே உடல்நலக்கோளாறு இருந்துள்ளது. அதனால் வலிப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

கார்த்தியின் உடல் பிரேத பரிசோதனை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் நடந்தது. பிரேத பரிசோதனையில் கார்த்தியின் தலையில் காயம் இருந்துள்ளது. அவர் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் அந்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னர் கார்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story