2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்: கர்நாடகத்தில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிப்பு டி.ஜி.பி. நீலமணி ராஜூ தகவல்


2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்: கர்நாடகத்தில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிப்பு டி.ஜி.பி. நீலமணி ராஜூ தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 4:30 AM IST (Updated: 17 April 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. நீலமணி ராஜூ நேற்று கூறினார்

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. நீலமணி ராஜூ நேற்று கூறினார்.

பேட்டி

பெங்களூருவில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ மற்றும் மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கமல்பந்த் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நக்சலைட்டுகள் அட்டூழியம் இல்லை

கர்நாடகத்தில் வருகிற 18-ந் தேதி (நாளை) முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக வருகிற 23-ந் தேதி மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறையில் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நக்சலைட்டுகள் அட்டூழியம் இல்லை. இன்றைய தினம் வரை தேர்தல் தொடர்பாக அவர்கள் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் வழங்கவில்லை. பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் மலைநாடு பகுதி, போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இரவு நேர ரோந்து பணியும் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய ஆயுதப்படை

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் கர்நாடகத்துக்கு 10 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் வந்தனர். இதில் தலா 5 கம்பெனி போலீசார் முதல்கட்ட தேர்தல் பகுதிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் பகுதிகளிலும் பணி செய்கிறார்கள். கொடி அணிவகுப்பு நடத்தினர். மொத்தமாக முதல்கட்ட தேர்தலில் 55 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும், 2-ம் கட்ட தேர்தலில் 57 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான கிராமங்களில் பணி செய்வார்கள். இவர்களுடன் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படையினரும் கைகோர்ப்பார்கள்.

கர்நாடகத்தில் முதல் கட்ட தேர்தலுக்காக 30 ஆயிரத்து 197 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6,318 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 2-வது கட்ட தேர்தலுக்காக 28 ஆயிரத்து 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,674 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. மொத்தமாக கூறினால் கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 225 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 11,992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்படும்.

பாதுகாப்பு பணியில் 90,997 ேபாலீசார்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒரு ஏட்டு, ஒரு ஊர்க்காவல் படை வீரரும், சாதாரண வாக்குச்சாவடிகளில் ஒரு போலீஸ்காரர் அல்லது ஒரு ஊர்க்காவல் படை வீரரும் பணி செய்வார்கள். 20 வாக்குச்சாவடிகளுக்கு சேர்த்து ஒரு போலீஸ் வாகனத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு அல்லது போலீஸ்காரர், ஒரு ஊர்க்காவல் படை வீரர் ஆகியோர் சேர்ந்து ரோந்து செல்வார்கள். ஒவ்வொரு துணை மண்டலத்திலும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை பணி செய்வார்கள். சோதனை சாவடியில் ஒரு ஏட்டு, ஒரு ஊர்க்காவல் படையினர் பணி மேற்கொள்வார்கள்.

மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தல் தினத்தில் 282 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 851 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1,188 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4,205 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள்-ஏட்டுகள் என்று 42,950 பேர், ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பை சேர்ந்த 40,117 பேர், வனபாதுகாவலர்கள்-வனகண்காணிப்பாளர்கள் என்று 414 பேரும், சிறை வார்டன்கள் 990 பேர் என்று மொத்தம் 90,997 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

18 கிரிமினல் வழக்குகள்

கர்நாடகத்தில இதுவரை தேர்தல் தொடர்பாக 18 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை 95,422 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 47,427 பேரின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக கலால் சட்டப்படி மொத்தம் 1,594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 220 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சோதனை சாவடிகளில் நடத்திய சோதனைகளின் மூலம் ரூ.15.72 கோடி பணம், 23,248 லிட்டர் மதுபானம், 3.12 கிலோ தங்கம், 43.85 கிலோ வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.38 லட்சம் மதிப்பிலான பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 1,697 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story