அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 8:59 PM GMT)

அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே மாணிக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி குதிரைக்கல் மேடு. இந்த பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 6.45 மணி அளவில் அங்குள்ள மேட்டூர்– பவானி ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார், மாணிக்கம்பாளையம் ஊராட்சி செயலாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு காடப்பநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தோம். பல இடங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்தும் அது எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்களும் நிற்பதில்லை. அதுமட்டுமின்றி தெருவிளக்குகளும் சரிவர ஒளிர்வதில்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளோம்,’ என்றனர்.

அதற்கு ஊராட்சி செயலாளர் கணேசன் மற்றும் போலீசார் பதில் அளித்து பேசுகையில், ‘குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த உடைப்பு சரி செய்யும் பணி முடிந்ததும் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குதிரைக்கல்மேடு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்,’ என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு 7.15 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் மேட்டூர்– பவானி ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story