அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டிய 11 ஆவணங்கள்; கலெக்டர் அறிவிப்பு


அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டிய 11 ஆவணங்கள்; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டிய 11 ஆவணங்கள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18–ந் தேதி (நாளை) காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடக்க உள்ளது. ஓட்டுபோட வரும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வாக்குச்சாவடி சீட்டுடன் கொண்டு வந்து ஓட்டுபோடலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு(வாக்குச்சாவடி சீட்டு) மட்டும் கொண்டு வந்தால் அந்த வாக்காளர் ஓட்டு போட முடியாத சூழல் ஏற்படும். எனவே அந்த சீட்டுடன் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள அடையாள சான்றுகளை எடுத்துவர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

11 ஆவணங்கள்

1.பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு).

2.ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசன்ஸ்).

3.மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணியாளர் அடையாள அட்டை.

4.வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வழங்கப்பட்டு உள்ள புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகங்கள்.

5.வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை(பான்கார்டு).

6.தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.

7.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை.

8.மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை.

9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

10.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக அடையாள அட்டை.

மேற்கண்ட 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து வாக்களிக்கலாம்.

ஏற்கனவே வாக்குச்சாவடி அதிகாரிகளால் வீடுகளில் வழங்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி சீட்டுகள் தொகுதி எண், தொகுதி பெயர், பாகம் எண், வரிசை எண் போன்ற வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும். வாக்குச்சாவடிகளில் அடையாள அட்டை சான்றாக பயன்படுத்த முடியாது. எனவே வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் தினத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.


Next Story