குடும்பத்தினர் மீது மட்டுமே அக்கறை அம்பரீஷ் சமாதி மீது குமாரசாமி அரசியல் செய்கிறார் சுமலதா கடும் தாக்கு
அம்பரீஷ் சமாதி மீது குமாரசாமி அரசியல் செய்வதாக சுயேச்சை வேட்பாளர் சுமலதா கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
அம்பரீஷ் சமாதி மீது குமாரசாமி அரசியல் செய்வதாக சுயேச்சை வேட்பாளர் சுமலதா கடுமையாக தாக்கி பேசினார்.
கடவுளை கண்டேன்
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை சுமலதா, சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். பகிரங்க பிரசாரத்திற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி சுயேச்சை வேட்பாளர் சுமலதா, மண்டியாவில் நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-
நான் கடந்த ஒரு மாதமாக மண்டியா தொகுதியில் பிரசாரம் செய்துள்ளேன். இந்த ஒரு மாதத்தில் நான் கடவுளை கண்டேன். எனது கணவர் அம்பரீஷ், என்னுடன் தான் இருக்கிறார் என்ற மனநிலையை நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள்.
கண்டுகொள்ளவில்லை
ஜனதா தளம்(எஸ்) கட்சியினருக்கு பெண்கள் மீது மரியாதை இல்லை. நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதை அறிந்ததும், என்னை பற்றி தவறாக பேசினர். அதுபற்றி நான் கண்டுகொள்ளவில்லை.
இந்த தொகுதியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அக்கட்சியினர் எதையும் செய்யவில்லை. ராணுவத்தினர் பற்றி குமாரசாமி தவறாக பேசினார். ஏழைகள் தான் ராணுவத்தில் சேருவதாக விமர்சித்தார். விவசாயிகள் மீது குமாரசாமிக்கு அக்கறை இல்லை.
விவசாய கடன் தள்ளுபடி
குடும்பத்தினர் மீது மட்டுமே அவர்களுக்கு அக்கறை. மக்களை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இந்த தொகுதியில் உங்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடக்கூடாதா?. நான் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
சாலைகள் மோசமாக உள்ளதாகவும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றும், மக்கள் என்னிடம் புகார் கூறினர். அப்படி என்றால், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், என்ன செய்தனர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை.
சேவையாற்ற வேண்டும்
நான் ஹுச்சே கவுடாவின் மருமகள் தான். இதை நீங்கள் (குமாரசாமி) ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. மக்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். நான் இந்த மண்ணின் மருமகள் தான் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறேன்.
மக்களின் கண்ணீரை துடைக்க தான் அரசியலுக்கு வர வேண்டும். சொந்த கண்ணீரை துடைக்க அல்ல. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். நான் மனுதாக்கல் செய்தபோது, மின்சாரத்தை தடை செய்தனர். என்னை பாா்த்து, அதுவும் ஒரு பெண்ணை பார்த்து, நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.
அம்பரீஷ் சமாதி
அம்பரீஷ் உடல் இறுதிச்சடங்கு குறித்து குமாரசாமி அடிக்கடி பேசுகிறார். அவரது உடலை மண்டியாவுக்கு எடுத்துச் செல்ல உதவியதாக அவர் கூறுகிறார். அதற்கான தகுதி அம்பரீசுக்கு இருந்தது. அதனால் மாநில அரசு உரிய மரியாதையை செய்தது. அம்பரீஷ் சமாதி மீது குமாரசாமி அரசியல் செய்கிறார். இது எத்தகைய அரசியல்?.
இவ்வாறு சுமலதா பேசினார்.
இதில் நடிகர்கள் தர்ஷன், யஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமலதா பேசும்போது, மக்களை பார்த்து மடிஏந்தி பிச்சை கேட்பது போன்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கண்கலங்கினார்.
Related Tags :
Next Story