திருப்பூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை; பெட்டிபெட்டியாக மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற அரசியல் கட்சியினர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை அரசியல் கட்சியினரும், மதுப்பிரியர்களும் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் கொண்ட திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். அதுபோல் விசைத்தறி தொழிற்கூடங்கள் நிறைந்ததால் பல்லடம், அவினாசி பகுதியிலும், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகள் இருப்பதால் தாராபுரம், காங்கேயம் பகுதியிலும், கோழிப்பண்ணை அதிகம் இருப்பதால் உடுமலை சுற்றுப்பகுதிகளிலும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மது விற்பனை அதிகமாக இருப்பது வழக்கம்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் திருப்பூர் மாவட்டத்தின் மது விற்பனை வழக்கமான நாட்களை விட 2 மடங்கு அதிகரிக்கும். அதுபோல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மது விற்பனை அதிக அளவில் காணப்படும். விடுமுறையை தொழிலாளர்கள் மது அருந்தி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்லின்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களை கட்டியது. பெட்டி பெட்டியாத மதுப்பாட்டில்களை அரசியல் கட்சியினரும், மதுப்பிரியர்களும் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் சூடு பிடித்தது. இதன்காரணமாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாக இருந்தது. இந்த மதுபாட்டில்களை ஆங்காங்கே பதுக்கி வைத்து சப்ளை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டத்தில் 230 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியோடு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள எலைட் மது விற்பனை மையங்களும் 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன.