பொங்கலூர் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக விளம்பர பலகை வைத்ததால் பரபரப்பு; அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கிராம மக்கள் அதிரடி
பொங்கலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக விளம்பர பலகை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், வடமலைபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கெருடமுத்தூர் அரிசன காலனி. இங்கு சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க அதிரடியாக முடிவு எடுத்தனர். அதன்படி தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மறுத்ததை கண்டித்தும், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம பகுதியில் விளம்பர பலகை வைத்தனர்.
அந்த விளம்பர பலகையில் கூறப்பட்டு உள்ளதாவது:–
அத்தியாவசிய தேவைகளான அடிப்படை வசதி கேட்டு பல முறை மனுகொடுத்தும், அறவழிப்போராட்டம் நடத்தியும், எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்யாமல் ஏழை மக்களாகிய எங்களை அரசு புறக்கணிக்கிறது. எனவே எங்கள் பகுதியில் காற்றாலை மின் கம்பியை அகற்ற வேண்டும், குட்டையை தூர்வார வேண்டும், தெருவிளக்கை முறையாக பராமரிக்கவேண்டும், மயான வசதி செய்து கொடுக்கவேண்டும், பொதுக்கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும், விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாய நலக்கூடம் ஆகிய உடனடியாக அமைத்து தரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விளம்பர பலகையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் தாசில்தார் சாந்தி, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி(ஊராட்சி) மகேஷ்வரன், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கெருடமுத்தூர் அரிசன காலனிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களிடம் அதிகாரிகள் விரைந்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டனர்.
இதன் உடன்பாடு ஏற்பட்ட பொதுமக்கள் நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் வாக்களிக்க இருப்பதாக கூறினார்கள்.