ஆட்சியமைக்க போதிய பலம் கிடைக்காவிட்டால் சரத்பவாரின் ஆதரவை மோடி கோர கூடாது சிவசேனா வலியுறுத்தல்

ஆட்சியமைக்க போதிய பலம் கிடைக்காவிட்டால் சரத்பவாரின் ஆதரவை மோடி கோர கூடாது சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 April 2019 5:00 AM IST (Updated: 17 April 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க போதிய பலம் கிடைக்காவிட்டால் காஷ்மீரை சேர்ந்த மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் கட்சிகள் மற்றும் சரத்பவார் கட்சியின் ஆதரவை மோடி கோரக்கூடாது என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டு பிரிவினைவாதிகள்

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் நாட்டு பிரிவினை தொடர்பாக பேசுபவர்களை பிரதமர் மோடி கடுமையாக எதிர்க்கிறார்.

இதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்க முன்வர வேண்டும்.

நாட்டு பிரிவினை தொடர்பாக பேசும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைக்க மாட்டோம் என்று அவர் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு மோடி தலைமையில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இ்ல்லாத பட்சத்தில், அந்த கட்சிகளின் ஆதரவை பெறுவது மற்றும் அந்த கட்சிகளை மந்திரி சபையில் இடம்பெற செய்வது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும்.

சரத்பவார்

மேலும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு எதிராகவும் மோடி பேசி வருகிறார். சரத்பவாருக்கு எதிரான தற்போதைய நிலைப்பாட்டை தேர்தலுக்கு பின்பும் மோடி கடைப்பிடிக்க வேண்டும்.

நாட்டை துண்டாட நினைப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை எதிர்கால அரசியலில் மையப்படுத்தக்கூடாது.

அரசியல் காரணங்களுக்காக அவர்களுடைய ஆதரவை கோரினால், அது நமது ராணுவ வீரர்களை புண்படுத்துவதாக அமைந்து விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story