கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு


கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 April 2019 5:00 AM IST (Updated: 17 April 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கி வைத்திருந்த பணம் சிக்கியது. சோதனை செய்ய விடாமல் தடுத்த அ.ம.மு.க.வினரை விரட்ட துணை ராணுவ படையினர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், பழைய தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள வாடகை கட்டிடத்தில் அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மாடியிலும் ஒரு அறை உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசாரும், பறக்கும் படையினரும் நேற்று இரவு 8.30 மணி அளவில் அங்கு சென்றனர். அப்போது அந்த அறையில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க அ.ம.மு.க.வினர் பணத்தை எண்ணி கொண்டிருந்ததாக தெரிகிறது.

போலீசார் மற்றும் பறக்கும் படையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் 4 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தவேல் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

மேலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே ஒன்றிய அலுவலகம் உள்ள வணிக வளாகம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பறக்கும் படையினர் மற்றும் போலீசார், கட்சி அலுவலக அறையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் அந்த கட்சியினர், அந்த அறைக்குள் புகுந்து பணத்தை அள்ளி செல்ல முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து அவர்களை விரட்டுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் நிலைமை விபரீதமானது. அவர்களை விரட்டுவதற்காக, துணை ராணுவப்படையினர் வானத்தை நோக்கி 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தம் கேட்டு அ.ம.மு.க.வினர் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அதன்பிறகு அலுவலகத்தை சுற்றிலும் யாரும் செல்ல முடியாத அளவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்துக்குள் தொடர்ந்து சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை எண்ணும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். போலீசாரை தாக்க முயன்றதால், துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.

Next Story