தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அரசு பணியாளர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் - கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் தகவல்


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அரசு பணியாளர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் - கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 3:45 AM IST (Updated: 17 April 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அரசு பணியாளர்கள் 4 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபாகர் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரபாகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காலை தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு பணியாளர்களை அனுப்புகிறார்கள். மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் நடத்த தேவையான பொருட்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பட்டியலில் உள்ளபடி பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் பொருட்கள் வழங்கி மாலை அது குறித்து தகவல் கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் தேர்தல் நடத்த அனைவரும் தயார் நிலையில் உள்ளது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான சக்கர நாற்காலிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர்கள் 3 வாகனங்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளின் கீழ் தனியார் இடங்களில் இருந்த 3,799 சுவர் விளம்பரங்களும், அரசு இடத்தில் இருந்த 4 ஆயிரத்து 259 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 163 புகார்கள் பெறப்பட்டு, அதில் 53 புகார்கள் உண்மை தன்மை அறியப்பட்டு அவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படையால் ஒரு கோடியே 5 லட்சத்து 76 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அதில் சரியான ஆவணங்கள் இருந்த ரூ.83 லட்சத்து 30 ஆயிரத்து 550 ரூபாய் விடுவிக்கப்பட்டது. ரூ.22 லட்சத்து 46 ஆயிரத்து 100 மீது விசாரணை நடந்து வருகிறது.

அதேபோல சோதனையில் 83.30 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.35 ஆயிரத்து 840 ஆகும். சிவிஜில் மூலமாக 39 புகார்கள் வந்தன. அதில் 21 புகார்கள் உண்மை தன்மை கண்டறியப்பட்டு அவற்றின் மீது விசாரணை நடந்து வருகிறது. இதுவரை பிரசாரத்திற்கு 143 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அனுமதி முடிவடைந்தது. அதே போல நமது மாவட்டத்தில் 89 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 9 தற்காலிக கட்சி அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

போன் மூலம் புகார் மையத்தில் 4 ஆயிரத்து 404 அழைப்புகள் பெறப்பட்டன. அதில் 4 ஆயிரத்து 383 அழைப்புகள் பேசப்பட்டன. அதில் 21 அழைப்புகள் தவறானவை. 99 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஏனைய 4 ஆயிரத்து 284 அழைப்புகளில்பேசியவர்கள் வாக்குச்சாவடி, வாக்காளர்கள் தொடர்பான தகவல்களை கேட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பணியாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தது, சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பான புகார்களின் கீழ், ஒரு ஊராட்சி செயலாளர், ஒரு கூட்டுறவு துறை பணியாளர், ஒரு வட்டார கல்வி அலுவலர், ஒரு ஆசிரியர் என 4 பேர் பணிஇடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே, ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண் சந்த் ஷமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story