கிருஷ்ணகிரி வழியாக, ரெயில் பாதை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் - வேட்பாளர் செல்லகுமார் பிரசாரம்


கிருஷ்ணகிரி வழியாக, ரெயில் பாதை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் - வேட்பாளர் செல்லகுமார் பிரசாரம்
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வழியாக ரெயில் பாதை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று வேட்பாளர் செல்ல குமார் பிரசாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் செல்ல குமார் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று அவர் கிருஷ்ணகிரி நகரில் தீவிர பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும். ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். படித்த இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.

மேலும் ஓசூரில் மலர் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். கரும்பு, நெல்லுக்கு இருப்பது போல் மாம்பழத்திற்கும் குறைந்தபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு குளறுபடி ஒழுங்கு செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். நலிவடைந்த சிறு, குறுந்தொழில்கள் மேம்படுத்தப்படும். கிருஷ்ணகிரி வழியாக ரெயில் பாதை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தின் போது கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., சுகவனம், நடிகர் இமான் அண்ணாச்சி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தி.மு.க. நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பரிதா நவாப், அமீன், அஸ்லம், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் ஏகம்பவாணன், ஜேசு துரைராஜ், ரகமத்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story