வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து: பறக்கும்படையினர் வேறு தொகுதிக்கு மாற்றம்


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து: பறக்கும்படையினர் வேறு தொகுதிக்கு மாற்றம்
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 17 April 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தொகுதிக்கான பறக்கும்படையினர் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர், 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படை, நிலைகண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். எந்தவித ஆவணமும் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்சென்றால் அதை பறிமுதல் செய்தனர்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படை, 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணிபுரிந்து வந்தனர். ஓட்டுப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூரில் இருந்து அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அதில் வாக்காளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்கள் பொருத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அ.தி.மு.க., தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காட்பாடி பகுதியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடியே 48 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. நேற்று முன்தினம் வரை வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து மாலை 6 மணிக்கு தங்கள் பிரசாரத்தை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட வேலைகளுக்கு தயாரானார்கள். அந்த நேரத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும்படை மற்றும் நிலைகண்காணிப்பு குழுவினர் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி வாணியம்பாடி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும், வேலூர், கே.வி.குப்பம் தொகுதி பறக்கும்படையினர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story