செம்பரம்பாக்கம் ஏரியில் 2 பவுன் நகைக்காக பெண் கொலை கட்டிடத்தொழிலாளிகள் 2 பேர் கைது


செம்பரம்பாக்கம் ஏரியில் 2 பவுன் நகைக்காக பெண் கொலை கட்டிடத்தொழிலாளிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 17 April 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரியில் 2 பவுன் நகைக்காக பெண்ணை கொன்று, நகையை அடகு வைத்து மது குடித்த கட்டிடத்தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

திருவேற்காடு மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோவிலன் (வயது 42). இவருடைய மனைவி தனலட்சுமி (35). இருவரும் கட்டிடத்தொழிலாளர்கள். கடந்த 15-ந்தேதி காலை கட்டிட வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற தனலட்சுமி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிலன், தனது மனைவி மாயமானதாக திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். மேலும் அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளிகள் சக்கரவர்த்தி(32), ஏழுமலை(41) ஆகியோர்தான் தனது மனைவியை வேலைக்கு அழைத்து சென்றதாகவும், அவர்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக சக்கரவர்த்தி, ஏழுமலையிடம் விசாரிக்க அவர்களது வீட்டுக்கு சென்றபோது இருவரும் அங்கு இல்லை. அவர்கள், தங்கள் சொந்த ஊரான திருவண்ணாமலையில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், அங்கு சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், கட்டிட வேலை எதுவும் இல்லாததால் திண்டிவனத்தில் தனலட்சுமியை இறக்கி விட்டதாக முதலில் தெரிவித்தனர்.

ஆனால் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள், 2 பவுன் நகைக்காக தனலட்சுமியை கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

கட்டிடத்தொழிலாளர்கள் என்பதால் சக்கரவர்த்திக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 15-ந்தேதி கட்டிடவேலை இருப்பதாக தனலட்சுமியை சக்கரவர்த்தி, ஏழுமலை இருவரும் அழைத்து சென்றனர். ஆனால் வேலை இல்லாததால் 3 பேரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மீன்பிடித்தனர்.

மாலை நேரம் ஆனதால் இருவருக்கும் மது அருந்தவேண்டும் என எண்ணினர். ஆனால் வேலை இல்லாததால் கையில் பணம் இல்லை. மேலும் தேர்தலையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடையும் விடுமுறை என்பதால் தனலட்சுமியிடம் மது வாங்க பணம் தரும்படி கேட்டனர்.

அவர் பணம் இல்லை என்றார். அதற்கு அவர்கள், தனலட்சுமி அணிந்து இருந்த நகைகளை கழட்டி தரும்படி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தனலட்சுமியை ஓங்கி அடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர் அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அவர், தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவாரோ என பயந்து, வறண்டு கிடக்கும் ஏரியில் ஒரு பகுதியில் மட்டும் முட்டளவுக்கு தேங்கி நின்ற தண்ணீரில் தனலட்சுமி முகத்தை அமுக்கி கொலை செய்து விட்டு, அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசினர்.

இதையடுத்து அந்த நகையை பூந்தமல்லியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தை வாங்கி 3 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கினர்.

இருவரும் திருவண்ணாமலைக்கு சென்று அங்கு வைத்து போதை இறங்க இறங்க அந்த மதுவை குடித்து வந்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை செம்பரம்பாக்கம் ஏரிக்கு அழைத்துச்சென்று அங்கு முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமி உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

எப்படியாவது மது அருந்த வேண்டும் என்ற எண்ணமே இருவரையும் கொலை வெறிக்கு தூண்டி உள்ளது. இதனால் 2 பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்து உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். கைதான இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story