நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கும் பலம் மோடிக்கு இல்லை தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையா பேச்சு


நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கும் பலம் மோடிக்கு இல்லை தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 6:31 PM GMT)

நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கும் பலம் மோடிக்கு இல்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கும் பலம் மோடிக்கு இல்லை என்று சித்தராமையா கூறினார்.

மோடிக்கு பலம் இல்லை

கர்நாடகத்தில் தார்வார், கலபுரகி உள்பட 14 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே சிறப்பான முறையில் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் அவரை எதிர்க்கும் பலம் மோடிக்கு இல்லை. அதனால் கார்கேவை தோற்கடிக்க மோடி திட்டம் வகுத்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி

பா.ஜனதா கட்சி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஆதரவான கட்சி இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்துச் கொண்டு பிரதமரை சந்தித்தேன். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதை மோடி ஏற்கவில்லை.

மானம் கெட்டவர்கள்

விவசாய கடன் தள்ளுபடி குறித்து எடியூரப்பா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பா.ஜனதா ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்யமாறு கோரிக்கை விடுத்தோம். அதற்கு எடியூரப்பா, என்னிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்று கூறினார்.

கர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும், எங்கள் முகத்தை பார்க்க வேண்டாம், மோடி முகத்தை பார்த்து ஓட்டுப்போடுங்கள் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் இவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவினர் மானம் கெட்டவர்கள். அவர்கள் பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகக்கூட தகுதியற்றவர்கள்.

கவனிக்க வேண்டும்

மத்திய மந்திரி அனந்த குமார் ஹெக்டே, கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகும் தகுதி இல்லாதவர். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதாக கூறுவது எத்தகைய முட்டாள்தனம். இவற்றையெல்லாம் வாக்காளர்கள் கவனிக்க வேண்டும்.

கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, பணத்திற்காக பா.ஜனதாவில் சேர்ந்தவர் உமேஷ்ஜாதவ். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள். மல்லிகார்ஜுன கார்கேவை வெற்றி பெற வையுங்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story