ஜருகுமலை வாக்குச்சாவடிக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள்


ஜருகுமலை வாக்குச்சாவடிக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஜருகுமலை வாக்குச்சாவடிக்கு தலைச்சுமையாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

பனமரத்துப்பட்டி,

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் செல்ல சரியான வழிப்பாதை இல்லாத இடங்களுக்கு தலைச்சுமையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அதன்படி, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஜருகுமலையில் மேலூர், கீழூர் என்ற 2 வார்டு பகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜருகுமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் மொத்தம் 675 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் போலீஸ் பாதுகாப்புடன் ஜருகுமலை வாக்குச்சாவடிக்கு மண்டல அலுவலர்கள் சரக்குவேனில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை எடுத்து சென்றனர். இந்த சரக்குவேன் மலையில் சென்று கொண்டிருந்தது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற போது, அந்த சரக்கு வேனால் தொடர்ந்து மலைப்பகுதியில் செல்ல முடியவில்லை.

இதனால் சரக்குவேன் பாதியிலேயே நின்றது. இதையடுத்து அதிகாரிகள் ஜருகுமலை கிராம மக்கள் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக எடுத்து சென்றனர். அவர்கள் 4 கிலோ மீட்டர் வரை நடந்தே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக ஜருகுமலைக்கு கொண்டு சென்றனர்.

Next Story