மாவட்டத்தில் 415 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவம் பாதுகாப்பு


மாவட்டத்தில் 415 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவம் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 April 2019 10:00 PM GMT (Updated: 17 April 2019 6:58 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 415 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்குகிறது.

ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், மேட்டூர் சட்டமன்ற தொகுதி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியிலும், சங்ககிரி தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளன. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.ஆர்.எஸ். சரவணன், தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், அம்மா மக்கள் முனேற்றக்கழகம் சார்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தங்களது பிரசாரத்தை முடித்துக் கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் 28 லட்சத்து 95 ஆயிரத்து 47 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 47 ஆயிரத்து 720 பேரும், பெண்கள் 14 லட்சத்து 47 ஆயிரத்து 192 பேரும் அடங்குவர். இதுதவிர, திருநங்கைகள் 135 பேர். இவர்கள் ஓட்டுப்போட வசதியாக 3,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேலம் தொகுதியில் மட்டும் 172 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்டத்தில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 415 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு போலீசாருடன் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1,803 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 4,242 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,228 கட்டுப்பாட்டு எந்திரங்களும், இதுதவிர, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை உறுதி செய்யும் கருவிகளும் (விவிபேட்) பயன்படுத்தப்படுகிறது.

வாக்குப்பதிவின்போது பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று எந்திரம் பொருத்தும் வகையில் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 164 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகரம், புறநகர் என உள்ளூர் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, துணை ராணுவம் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதனிடையே, நேற்று காலை சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானமான குமாரசாமிப்பட்டியில் பாதுகாப்பு பணிக்கு வந்த அனைத்து போலீசாரும் கூடினார்கள். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் எந்தெந்த பகுதிக்கு எத்தனை போலீசார் என பிரித்து லாரிகள் மூலம் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல், சேலம் மாநகர பகுதி பாதுகாப்பிற்காக லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

Next Story