தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான 128 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான 128 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 April 2019 10:00 PM GMT (Updated: 17 April 2019 7:21 PM GMT)

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான 128 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர் (தனி) பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த தொகுதிகளில் மொத்தம் 1,787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 128 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 13 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேர்தலின்போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து தடுக்க 40 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வீடியோ பதிவு மூலம் வாக்குப்பதிவு தொடர்பான பணிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story