வடசென்னையில்தான் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
வடசென்னையில்தான் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை,
வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்புவதை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வடசென்னை ஆகிய 3 தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பெரம்பூர் தொகுதி ஆகியவற்றை 276 மண்டலங்களாக பிரித்துள்ளோம். 15 முதல் 18 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கியதுதான் இந்த மண்டலம்.
சென்னையில் உள்ள 3 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளுக்கும் எல்லா பொருட்களும் கொண்டு செல்லப்பட்டது. வாக்குச்சாவடியில் இருக்கவேண்டியவர்களும் சென்றுவிட்டார்கள். பெண் ஊழியர்களாக இருந்தால், அவர்கள் இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்குள் சென்றால் போதும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதி என 4 தொகுதிகளை பொறுத்தமட்டில் 450 வாக்குச்சாவடி மையங் கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடி மையங்களில் தலா 5 வீரர்கள் நிற்பார்கள்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் 24 மணி நேரமும் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வரலாற்று ரீதியாக கடந்த காலங்களில் நடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது வடசென்னையில்தான் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகமாக இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற இடைத்தேர்தலும் வருவதால் கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதுபோன்ற காரணத்தால் வடசென்னையில் தான் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகமாக இருக்கிறது. வடசென்னை தொகுதியோடு ஒப்பிடுகையில் மத்திய சென்னை தொகுதியிலும், தென் சென்னை தொகுதியிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story