தேர்தலில் பணிபுரியும் ஊழியர்கள், தனி பஸ்களில் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர் - கலெக்டர் தகவல்


தேர்தலில் பணிபுரியும் ஊழியர்கள், தனி பஸ்களில் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 8:24 PM GMT)

இன்று நடைபெறும் தேர்தலில் பணிபுரியும் ஊழியர்கள் தனி பஸ்களில் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.

சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்று நடைபெறவுள்ள தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 1,348 வாக்குச்சாடிகளிலும் பணிபுரிய 7 ஆயிரத்து 312 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பணிபுரிபவர்கள், அவர்கள் பணிபுரியும் தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு கணினி மூலம் அவர்கள் பணிபுரியும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று (வியழக்கிழமை) தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் முதல் நாள் (நேற்று) இரவு வாக்குச்சாவடிக்கு செல்ல வசதியாகவும், தொகுதிவிட்டு வேறு இடத்தில் பணிக்கு செல்பவர்கள் சிரமப்படாமல் சென்று வர வேண்டும் என்பதற்காக இந்த தடவை முதல் முறையாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

கிராம பகுதிகளை பொறுத்தவரை 10 வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைத்து ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களை அவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு சென்று இறக்கி விட்டு, மறுபடியும் தேர்தல் முடிந்த பின்பு அவர்களை மீண்டும் அழைத்து வந்துவிடும். இந்த வகையில் 50 அரசு பஸ்கள் வரை இயக்கப்படுகிறது இந்த பஸ்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்திவிடும்.

இதுதவிர நகர் புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிபவர்களை அழைத்து சென்று இறக்கி விட்டு பின்னர் மீண்டும் அழைத்துவர தனியாக 20 பள்ளிக்கூட பஸ்கள் மற்றும் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி நேற்று மாலை 3 மணி இந்த வாகனங்களில் ஊழியர்கள் புறப்பட்டு வாக்குச்சாவடிக்கு சென்றனர்.

வாக்குச்சாடிகளில் தங்குபவர்களுக்காக பாய் மற்றும் தலையணை புதியதாக வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் மையங்களில் குளியலறை கழிப்பறை வசதி மின்வசதி குடிநீர் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக சாய்தள வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுக்காக புதிய வாளி மற்றும் கப் வாங்கி தரப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவின் சதவீதத்தை தெரிந்து கொள்ள புதியதாக வாக்குப்பதிவு கண்காணிப்பு செயலி என்ற ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் தனியாக 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள ஊழியர்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குசாவடி அலுவலர்களிடம் வாக்குப்பதிவு விவரத்தை சேகரித்து அதை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்கள்.

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டி மற்றும் தேவையான பொருட்களை கொண்டு செல்ல 109 வாகனங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. மேலும் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு தனியாக 28 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு முன்பு காலையில் வாக்குசாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story