மாவட்ட செய்திகள்

தையல் தொழிலாளி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை: மனைவி-கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம் + "||" + Sewing worker Murder wife and Counterfeit Lover Arrested Sensation Statements

தையல் தொழிலாளி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை: மனைவி-கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்

தையல் தொழிலாளி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை: மனைவி-கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தையல் தொழிலாளி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, கள்ளக்காதலுனுடன் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கல்லூரணி காட்டு பகுதியில் கடந்த 12-ந்தேதி உடல் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைந்த நிலையில் இருந்தது. அவரது பையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்ததற்கான அடையாள அட்டை இருந்தது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி அம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் நெல்லை மாவட்டம் குருவிகுளம் முதலியார் தெருவைச் சேர்ந்த ராமன் மகன் ராமநாதன் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவருடைய மனைவி மாரிலட்சுமி (25). இவர்களுக்கு நிஷா (3) என்ற மகள் உள்ளார். ராமநாதன் பல்லடத்தில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 31-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மாயமானது தெரிய வந்தது.

இதையடுத்து ராமநாதனின் செல்போனில் பதிவான அழைப்புகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராமநாதனிடம் செல்போனில் அவருடைய நண்பரான குருவிகுளம் அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்த குமார் சங்கர் மகன் தினேஷ்குமார் (24) அடிக்கடி பேசியது தெரிய வந்தது. இதையடுத்து தினேஷ்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் ராமநாதனின் மனைவி மாரிலட்சுமியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாகவும், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராமநாதனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து தினேஷ்குமார், மாரிலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான தினேஷ்குமார் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும், ராமநாதனும் நண்பர்கள். நான் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணித்தள மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தேன். ராமநாதன் முதலில் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது ராமநாதனின் மனைவி மாரிலட்சுமிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ராமநாதன் பல்லடத்தில் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் தன்னுடைய மனைவி, குழந்தையை அங்கு அழைத்து செல்ல திட்டமிட்டார். இதுகுறித்து மாரிலட்சுமி என்னிடம் தெரிவித்தார். இதனால் எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராமநாதனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 31-ந்தேதி ராமநாதன் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டு வந்தார். இதுகுறித்து ராமலட்சுமி என்னிடம் செல்போனில் தெரிவித்தார். உடனே நான் ராமநாதனை அழைத்து வருவதற்காக கோவில்பட்டி பஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு வந்த ராமநாதனை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் குருவிகுளத்துக்கு புறப்பட்டேன். நாங்கள் கோவில்பட்டி அருகே கல்லூரணியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு, அங்குள்ள காட்டு பகுதியில் சென்று மது அருந்தினோம். அப்போது போதையில் மயங்கிய ராமநாதனின் தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

கைதான தினேஷ்குமார், மாரிலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சங்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் தினேஷ்குமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், மாரிலட்சுமியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தையல் தொழிலாளியை மனைவியின் உடந்தையுடன் நண்பரே கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.