வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான சாராயம் பறிமுதல் காரைக்காலில் போலீஸ் அதிரடி


வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான சாராயம் பறிமுதல் காரைக்காலில் போலீஸ் அதிரடி
x
தினத்தந்தி 18 April 2019 3:15 AM IST (Updated: 18 April 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

காரைக்கால்,

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி 3 நாட்கள் மதுக்கடை மற்றும் கள், சாராயக்கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை, காரைக்கால் பகுதியில் உள்ள மதுக்கடை, கள், சாராயக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.

இதை பயன்படுத்தி திருட்டுத் தனமாக அதிக விலைக்கு மதுபானம், சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீசார், கலால் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நெடுங்காடு அருகே குளக்குடி வாய்க்கால் கரையோரம் 700 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் வயல்வெளி பகுதியில் அதிக அளவில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநள்ளாறு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அங்கு கேன்கள், பாட்டில்கள், பெட்டிகள் என 4,600 லிட்டர் அளவிலான சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சாராயம் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? அல்லது சாராய கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்காலில் ஒரே நேரத்தில் அதிகளவு சாராயம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story